யோக நித்திரை
யோக நித்திரை என்பது விழிப்பு நிலைக்கும், கனவு நிலைக்கும் இடையிலான விழிப்புணர்வு நிலையாகும். உறக்கத்தைப் போலல்லாமல் இங்கு, நமது உடல் வெளிப்புறமாக முழுமையான ஓய்வு நிலையில் இருக்கும் அதே வேளையில், நாம் உள்நோக்கி விழிப்புடன் இருக்க முயல்கிறோம்.
இங்கு நமது உள்ளார்ந்த விழிப்புநிலை, நம் விழிப்புணர்வை 'சிந்தித்தல்' நிலையிலிருந்து 'உணர்தல்' நிலைக்கு மாற்றுகிறது. உடலின் உள் ஆற்றல் புலத்தை நாம் உணர்ந்து அதன் மீது கவனம் செலுத்தும்பொழுது, நமது உடலமைப்பு முழுவதும் புத்துணர்ச்சி பெற்றுக் குணமடைகிறது. மேலும், நமது விழிப்புணர்வில் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டு விரிவடைகிறது, இது நமது அன்றாட ஆன்மிகச் சாதனைக்குப் பெரிதும் உதவுகிறது.
யோக நித்திரை என்பது விழிப்பு நிலைக்கும், கனவு நிலைக்கும் இடையிலான விழிப்புணர்வு நிலையாகும். உறக்கத்தைப் போலல்லாமல் இங்கு, நமது உடல் வெளிப்புறமாக முழுமையான ஓய்வு நிலையில் இருக்கும் அதே வேளையில், நாம் உள்நோக்கி விழிப்புடன் இருக்க முயல்கிறோம். இந்த நுட்பம், முழுமையான உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், நல்வாழ்விற்காகவும், ஆத்ம ஞானம் பெற ஆன்மாவை விழித்தெழச் செய்யவும் ரிஷிகளால் வழங்கப்பட்ட மிகவும் தொன்மையான யோகப் பயிற்சியாகும்.
செயல்முறை
முதுகு தரையில் படும்படி நேராக சௌகர்யமாகப் படுக்கவும். கண்களை மூடிக் கொள்ளவும். முழு உடலையும் தளர்த்தி ஓய்வாக வைத்துக் கொள்ளவும்.
இருபுறமும் கைகளைப் பக்கவாட்டில் நீட்டிக் கொள்ளவும். உங்கள் உள்ளங்கைகளை மேல் நோக்கியும், பாதங்களைச் சிறிது அகலமாகவும், தளர்வாகவும் வைத்துக் கொள்ளவும். ஆழமாகவும், நிதானமாகவும் சிலமுறை சுவாசிக்கவும்.
முதலில் பாதங்களிலிருந்து தொடங்கவும். உங்கள் பாதங்களின் மீது கவனம் செலுத்தி அவற்றை மெதுவாகத் தளர்த்தவும். பாதங்களில் உள்ள ஆற்றலையும், அதன் அதிர்வையும் அறிந்துணரவும். உங்களுக்குத் தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு இந்நிலையில் விழிப்போடு ஓய்வெடுக்கவும்.
உங்கள் கவனத்தை மெதுவாகக் கால் தசைகள், முழங்கால் மற்றும் தொடைகளை நோக்கிச் செலுத்தவும். ஒவ்வொரு பகுதியிலும் கவனம் செலுத்த போதுமான நேரத்தை எடுத்துக் கொள்ளவும். மெதுவாக உங்கள் கவனத்தை இடுப்பு பகுதியின் மீது செலுத்தி, பிறகு, இடுப்பிலிருந்து உடலின் கீழ் பகுதி முழுவதும் செலுத்தவும். உங்களுக்குத் தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு இந்நிலையில் விழிப்போடு ஓய்வெடுக்கவும்.
உங்கள் கவனத்தைக் கீழ் இடைப்பகுதி மற்றும் இடுப்பு பகுதிக்கு மாற்றவும். பின்னர், அடி வயிறு, வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் கவனம் செலுத்தவும். உங்களுக்குத் தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு விழிப்போடு ஓய்வெடுக்கவும்.
படிப்படியாக உங்கள் கவனத்தைத் தோள்கள், கைகள், மணிக்கட்டு, உள்ளங்கை மற்றும் விரல்களுக்கு மாற்றி, அவற்றை மெதுவாகத் தளர்த்துவதின் மூலம் அவற்றிலிருந்து அழுத்தத்தை (stress) விடுவிக்கவும். தொண்டை, கழுத்து மற்றும் முகத்தை நோக்கி உங்கள் கவனத்தைச் செலுத்தவும். பின்பு, தலைப் பகுதியை நோக்கி உங்கள் கவனத்தைச் செலுத்தவும். உங்களுக்குத் தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு விழிப்போடு ஓய்வெடுக்கவும்.
உடல் முழுவதும் கவனம் செலுத்தி, ஆற்றலின் அதிர்வை உணரவும். இப்போது, உங்கள் உடல் முழுவதும் வெண்ணிறப் பேரொளியால் நிரம்பியிருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளவும் அல்லது காட்சிப்படுத்திக் கொள்ளவும். ஆற்றல்களோடு, உங்கள் உடலுக்கு உள்ளேயும், உடலைச் சுற்றிலும் இந்த வெண்ணிற ஒளியின் பிரகாசத்தையும் அனுபவித்துணரவும்.
உங்கள் உடல் முழுவதையும் தளர்த்தவும். நீங்கள் அனைத்து விதமான அழுத்தம் (stress), வலி மற்றும் நோயிலிருந்து விடுபட்டு, மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பதாக ஆழ்மனக் கட்டளை இடவும். அனைத்து சக்கரங்களும் தூய்மை செய்யப்பட்டு, முழு உடலமைப்பும் தூய்மையடைந்து, ஆற்றல் வாய்ந்ததாக மாறுவதாக ஆழ்மனக் கட்டளை இடவும். தொடர்ந்து ஆழ்மனக் கட்டளைகளை இட்டவாறே ஒரே சீராக இயங்கும் உங்கள் சுவாசத்தைக் கவனிக்கவும். நீங்கள் விரும்பும் வரை இந்நிலையில் ஓய்வெடுக்கவும்.
படிப்படியாக, இந்த நிலையிலிருந்து வெளியே வந்து உங்கள் கைகள், கால்கள் மற்றும் உடலை மெதுவாக அசைக்கவும். உங்கள் வலது பக்கம் திரும்பி எழுந்திருக்கவும்.
கண்களை மெதுவாகத் திறக்கவும்.
நோக்கம்
உறங்கும் நேரத்தைக் குறைக்கவும், விழிப்புணர்வை விரிவுபடுத்தவும்.
யார்
8 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயிற்சி செய்யலாம்.
எங்கே
வீட்டின் உட்புறத்தில் அல்லது திறந்த வெளியிலும் பயிற்சி செய்யலாம்.
எப்பொழுது
ஒரு நாளின் எந்த நேரத்திலும் பயிற்சி செய்யலாம். உபவாசத்தின் பொழுது நாம் பயிற்சி செய்தால், அது உடல் மற்றும் மனதின் ஆற்றலைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும், நாள் முழுவதும் இறை ஆற்றலுடன் இணைந்திருக்க உதவுகிறது.
காலம்
குறைந்தபட்சம் 15- 20 நிமிடங்கள்
பலன்கள்
யோக நித்திரையைத் தொடர்ந்து பயிற்சி செய்வதால் பின்வரும் உடல், மன மற்றும் ஆன்மிக நலன்களை வழங்குகிறது:
உறக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும், உறக்கத்தின் கால அளவை குறைக்கவும் உதவுகிறது. 30 நிமிடங்களுக்கு யோக நித்திரையைத் தினமும் தொடர்ந்து, சரியாக மற்றும் ஆழ்ந்து பயிற்சி செய்யும்பொழுது உறக்கத்தின் கால அளவை 2 மணிநேரம் குறைக்க உதவுகிறது.
முழு உடலையும் புதுப்பிக்க உதவுகிறது.
உடலிலிருந்தும், மனதிலிருந்தும் சோர்வு, அழுத்தம் (stress) மற்றும் வலியை நீக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
மனதிற்கு அமைதி, தெளிவு மற்றும் விழிப்புணர்வை தருகிறது.
நமது புலன்களையும், உணர்ச்சிகளையும் கட்டுக்குள் கொண்டு வர உதவுகிறது.
ஒருமுகப்படுத்தும் சக்தியை அதிகரிக்கிறது.
ஆன்மிக சாதனையில் விரைவாக முன்னேற உதவுகிறது.
விழிப்புணர்வை விரிவடையச் செய்து சிறந்த முறையில் தியானம் செய்ய உதவுகிறது.
தியானத்தின் பொழுது எண்ணங்களற்ற நிலையை அடைய உதவுகிறது.
தியானத்தின் பொழுது உறக்கத்தை தவிர்ப்பதோடு முழுநேரமும் விழிப்புணர்வுடன் இருக்க உதவுகிறது.
இறைவனுடன் ஒன்றிணைந்த நிலையில் இருக்க உதவுகிறது. உறங்குவதற்கு முன் பயிற்சி செய்யும் பொழுது, அது தெய்வீக ஆற்றல்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க உதவுகிறது.
விழிப்புணர்வின் மிக உயரிய நிலையான துரிய நிலையை அடைய உதவுகிறது.
ஆன்மிக சாதனையின் குறிக்கோளான இறைவனுடன் ஒன்றிணைவதை ஏதுவாக்குகிறது.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...