மனம்
◘மனம் என்பது ஆறாவது அறிவாகும். பரிணாம வளர்ச்சியின் மிக உயர்ந்த நிலையாகக் கருதப்படும் மனம், உயரிய மானுட அனுபவங்களைப் பெற உதவுகிறது.
◘மனதின் முக்கிய நோக்கமானது மாயையின் துணைகொண்டு படைப்பின் அனுபவங்களைப் பெறுவதாகும்.
◘மனமானது ஐம்புலன்களான - தோல், கண்கள், நாக்கு, செவி மற்றும் மூக்கு இவற்றின் துணையோடு தொடு உணர்ச்சி, பார்த்தல், சுவைத்தல், கேட்டல் மற்றும் நுகர்தல் ஆகிய அனுபவங்களை நமக்கு அளிக்கிறது.
◘மனமும், உடலும் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன. இதில், மூளை மனதிற்கும், புலன்களுக்கும் இடையே இணைப்பு மையமாகச் செயலாற்றுகிறது.
◘மனம், உணர்வுகளின் உறைவிடமாகும். மனதில் நினைவுகளும், கர்ம வினைகளும் பதிவாகின்றன.
◘மனம், மனித உடல் முழுவதும் பரவியுள்ளது, மேலும், எண்ண ஆற்றலின் வழியே பரந்து, விரிந்து முழுப் பிரபஞ்சத்தையும் ஊடுருவிச் செல்லும் திறனையும் கொண்டுள்ளது.
◘மனதின் செயல்பாடு மிகவும் நுட்பமானதாகவும், பல பரிமாணங்களைக் கொண்டதாகவும் கருதப்படுகிறது.
◘அனுபவித்தல், கற்பனைத் திறன், படைப்புத் திறன் (creativity), உணர்ந்து கொள்ளுதல், நினைவில் வைத்தல், நினைவுகூர்தல் போன்றவை மனதின் மற்ற திறன்களாகும்.
◘அதிகப்படியான கர்மவினைப் பதிவுகள் மனதைப் பலவீனப்படுத்தி, ஆன்மிக வளர்ச்சியைத் தடுத்து, ஆன்மா உயர்நிலையை அடையத் தடை ஏற்படுத்துகிறது.
◘ஒருவரின் தூய்மை பெரும்பாலும் அவரது மனத்தூய்மையைப் பொறுத்தே அமைகிறது. எனவே, மனதிலிருந்து அரிஷட்வர்கங்கள் எனப்படும் எதிர்மறைத் தன்மைகளைக் களைதல் மிகவும் அவசியமாகும்.
◘இத்தகைய எதிர்மறைத் தன்மைகளைக் களைந்து, ஒருவரின் மனதைத் தூய்மைப்படுத்துவதில் ஆன்மிகச் சாதனை மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அகங்காரம்
◘அகங்காரம் என்பது தனது சுயத்தை அல்லது ஆன்மாவைத் தவறாக அடையாளப்படுத்தும் நிலையாகும்.
◘தான் ஆன்மா என்றுணராமல், உடல் அல்லது மனமே நான் எனக் கருதுவது அகங்காரமாகும்.
◘ஆன்மா உடலினுள் உறையத் தொடங்கியவுடன், தனது உண்மையான ஆன்ம சொரூபத்தை அல்லது சுய அடையாளத்தை மறந்து அவ்வுடலோடு ஒன்றி அவ்வுடலே தானாய் உணரும்பொழுது அகங்காரம் பிறக்கிறது.
◘மனதும், மாயையும் அகங்காரத்தை தோற்றுவிக்கிறது.
◘அகங்காரம் ஆன்ம ஞானத்தை மறைக்கிறது.
◘அகங்காரம் எல்லைகள் வகுத்து கட்டுப்படுத்துகிறது. அகங்காரம் தவறாக வழிநடத்துகிறது.
◘அகங்காரம் துன்பங்களுக்கு காரணமாகிறது.
◘அகங்காரம் ஆன்மிக சாதனையில் இடையூறு விளைவித்து ஆத்ம ஞானத்தை அடையும் முயற்சியில் தடையை ஏற்படுத்துகிறது.
◘அன்பினால் மட்டுமே அகங்காரம் மறைகிறது.
கர்ம வினை
◘நம் செயலின் விளைவே கர்ம வினையாகும்.
◘செயலின் நோக்கத்தைப் பொறுத்து அதன் விளைவு நல்ல அல்லது தீய பதிவுகளை உண்டாக்குகிறது, அதுவே, நல்வினை அல்லது தீவினை எனப்படுகிறது.
◘நல்வினை இன்பத்தையும், தீவினை துன்பத்தையும் அளிக்கிறது.
◘இந்த நல்வினை மற்றும் தீவினைப் பதிவுகள், அவற்றை ஒத்தப் பிறப் பதிவுகளை ஈர்த்து, அவற்றுள் தாக்கத்தை ஏற்படுத்தி, அதுவே இயல்பாக மாறி, இவ்வியல்புகளே பழக்கவழக்கங்களாகி இறுதியில் விதியாக உருவாகிறது.
◘கர்மவினைப் பதிவுகள் மனதிலும், உடலிலும் பதிவாகிறது.
◘நாம் அகங்காரத்தோடு செயல்படும்பொழுது மனமானது தீய பதிவுகளை அரிஷத்வர்க்கங்கள் அல்லது ஆறுவகையான எதிர்மறை தன்மைகளாக வெளிப்படுத்துகிறது.
◘நாம் ஒரு ஆன்மா என்ற புரிதலோடு, 'சாட்சி' பாவத்தில் அல்லது 'சரணாகதி' நிலையில் செயல்படும்பொழுது நாம் கர்ம வினைகளைப் பெறுவதில்லை. அவ்வாறு செய்யப்படும் செயல்கள் கர்மயோகமாகும்.
◘நல்வினை மற்றும் தீவினைப் பதிவுகள் இரண்டுமே மனதில் கர்ம சுமையைச் சேர்த்து, ஆன்மிக பயணத்தில் முன்னேறத் தடையாகின்றன.
◘ஆன்மாக்களாகிய நாம் கர்ம வினைகளின் காரணமாக மேலே முன்னேற முடியாமல் இப்புவியில் சிக்கித் தவிக்கிறோம்.
◘கர்ம வினை, பிறப்பு இறப்பு சுழற்சிக்குக் காரணமாகிறது.
◘இந்தப் பிறவியின் நோக்கம், கர்ம வினைகளைப் போக்கி, இந்தப் பிறப்பு இறப்பு சுழற்சியை முறியடித்து, நமது பிறப்பிடமான இறைப்பேரொளியிடம் திரும்பிச் சென்று வீடுபேறு அடைவதாகும்.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...