யோகம்
◘யோகம் என்பது ஒன்றிணைதல் ஆகும். அதாவது, ஆன்மா இறைவனுடன் ஒன்றிணைதல் ஆகும்.
◘யோகம் என்பது இறைவனுடன் ஒன்றிணைய, மனமுவந்து முழுக்கவனத்துடன் முயற்சிகளை மேற்கொள்வதாகும். ஆதலால், விழிப்புணர்வு யோகக்கலைக்கு மிகவும் இன்றியமையாதது ஆகும்.
◘நம் உடலைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு ஆசனங்கள் அல்லது சுவாசப் பயிற்சிகள் ஹத யோகம் அல்லது கிரியா யோகமாகிறது.
◘நம் மனதின் துணைக் கொண்டு செய்யப்படும் மந்திர ஜபம், புலனடக்கம் அல்லது தியானம் ராஜ யோகமாகிறது.
◘நம் உணர்வுகளின் துணைக் கொண்டு வெளிப்படுத்தப்படும் அன்பு, பக்தி அல்லது வழிபாட்டு முறைகள் பக்தி யோகமாகிறது.
◘நமது செயல்களின் துணைக் கொண்டு, எவ்வித பலனையும் எதிர்பாராது செய்யப்படும் தன்னலமற்ற சேவையும், அதன் விளைவுகளில் பற்றற்று இருப்பதும் கர்ம யோகமாகிறது.
◘நம் புத்தியின் துணைக் கொண்டு செய்யப்படும் பகுத்தாய்வு மற்றும் ஆத்ம விசாரணை ஞான யோகமாகிறது.
◘அனைத்து யோகங்களும், ஆத்ம ஞானத்தை அடைவதின் மூலம் இறைநிலையை உணர்தலில் முடிவுறுகிறது.
◘ஒருவரின் விருப்பத்தின் அடிப்படையில், மேலே குறிப்பிட்டுள்ள யோகங்களில் ஒன்றையோ, சிலவற்றையோ அல்லது அனைத்தையுமோ தேர்ந்தெடுத்துப் பயிற்சி செய்வதின் மூலம் ஆத்ம ஞானத்தை அடையலாம்.
◘யோகமார்க்கத்தில் தடையாய் இருப்பது அகங்காரமாகும்.
◘ஒரு யோகி என்பவர் எக்கணமும் யோகத்தில் நிலைத்திருப்பவர் ஆவார்.
அன்பு
◘அன்பு என்பது தெய்வீக உணர்வாகும்.
◘அன்பே நமது இயல்பாகும்.
◘அன்பு மென்மையான, மிகவும் மேன்மையான மனித உணர்வாகும்.
◘ஒவ்வொரு உயிரும் அன்பிற்காக ஏங்குகிறது .
◘அன்பு குற்றம் பார்ப்பதில்லை.
◘அன்பு அனைவரையும் அரவணைத்து செல்லும். அன்பு எதையும் மன்னிக்கும். அன்பு குணமாக்கும் மருந்தாகும். அன்பு நல்வழி வழிகாட்டும். அன்பு மாற்றத்தை ஏற்படுத்தும்.
◘அன்பு வரையறை அற்றது.
அமைதி
◘அமைதி என்பது சமநிலையான மனநிலையாகும்.
◘அமைதி என்பது பூரண மனநிறைவு பெற்ற நிலை; தேவைகள், விருப்பங்கள் அற்ற நிலையாகும்.
◘அமைதியே வாழ்வின் அடிப்படை அம்சமாகும்.
◘மௌனம் அமைதியைத் தரும்.
◘நம்முள்ளும், மற்றவர்களிடமும், இயற்கையுடனும் ஒத்திசைந்து நல்லிணக்கத்தோடு வாழும் பொழுது அங்கு அமைதி நிலைகொள்கிறது.
◘தனி ஒரு மனிதனின் அமைதி குடும்ப அமைதிக்கும், அதன் விளைவாகச் சமுதாய மற்றும் உலக அமைதிக்கும் வழிவகுக்கிறது.
◘அமைதியின் அதிர்வலைகள் நமது பூமியில் உள்ள அனைத்து வன்முறைகளையும் அழிக்கும் ஆற்றல் வாய்ந்தது.
விழிப்புணர்வு
◘விழிப்புணர்வு என்பது தன்னையும், வெளி உலகையும் புரிந்துணரும் அல்லது கவனித்தறியும் திறனாகும்.
◘விழிப்புணர்வு என்பது ஆன்மா, பல்வேறு ஆன்மிக மெய்நிலைகளை அறிந்துணரும் திறனாகும்.
◘விழிப்புணர்வு ஜாக்ரத், ஸ்வப்னம், சுசுப்தி, துரியம் முதலிய பல்வேறு நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவை உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவற்றின் பங்கேற்பை பொறுத்து அமையப்பெற்றது.
◘ஜாக்ரத் அல்லது விழிப்பு நிலை என்பது அன்றாட உலகியற்செயல்களின் பொழுது உள்ள நிலையாகும். இங்கு உடல் (பஞ்சேந்திரியங்கள்) மற்றும் மனம் (எண்ணங்கள்) இரண்டும் செயல்படுகின்றன.
◘ஸ்வப்னம் அல்லது கனவு நிலை என்பது உறக்கத்தில் நிகழ்வதாகும். இது உடல் அசைவற்று, மனம் செயல்படும் நிலையாகும்.
◘சுசுப்தி அல்லது ஆழ் உறக்க நிலை என்பது ஒருவர் எண்ணங்களற்ற நிலையை உணர்வதாகும். இந்நிலையில் உடல், மனம் இரண்டும் செயல்படுவதில்லை.
◘துரியம் அல்லது ஆன்ம விழிப்புநிலை என்பது ஆன்மா தன்னையறிந்த நிலையாகும். இந்நிலையில் மனம் மற்றும் உடலின் பங்கேற்பைக் கடந்து, ஆன்மா செயல்படுகிறது.
◘துரிய நிலை என்பது உன்னத விழிப்புநிலை ஆகும். இந்நிலை மற்ற மூன்று நிலைகளையும் உள்ளடக்கியதாகும்.
◘துரிய நிலையில் உள்ளுணர்வு செயல்படுகிறது. மேலும், ஆன்மா சாட்சி பாவம் ஏற்கிறது.
◘மெய்ஞானிகள் எப்பொழுதும் மற்ற மூன்று நிலைகளையும் கடந்து, உயரிய துரிய நிலையில் நிலை கொள்பவராவர்.
◘நம் ஆன்மிக முன்னேற்றத்தின் அளவுகோல், நாம் அடைந்துள்ள விழிப்புணர்வின் அளவே ஆகும்.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...