மாயை
◘மாயை என்பது பிரபஞ்சம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பொருளாகும்.
◘ஆன்மா மனதைக் கருவியாகக் கொண்டு மாயையின் வழியாக பார்க்கும்பொழுது இவ்வுலகம் புலப்படுகிறது. ஒளிப்படக்காட்டி (ப்ரொஜெக்டர்) வழியாகத் திரைப்படம் தெரிவது போல், நம் மனதின் வழியாக இவ்வுலகைக் காண்கிறோம்.
◘மாயை என்பது மெய்ப்பொருளாகியப் பேரொளியை மறைக்கும் திரையாகும்.
◘மாயையின் நோக்கம் படைப்பில் பன்முகத்தன்மையை ஏற்படுத்துவதாகும். எனவே, மாயை இல்லையெனில் இப்படைப்பு அனைத்தும் பேரொளியாக மட்டுமே காணப்படும். எவ்வித வேறுபாடும் சாத்தியமில்லை.
◘மாயையாகிய இவ்வுலகம் புலன்களால் உணரப்படுவதாகும். இது கால வரையறைக்கு உட்பட்டது. ஆனால், இறையொளியானது கால வரையறையற்ற மெய்நிலையாகும்.
◘மாயையானது படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் என மாற்றத்திற்கு உட்படுவதாகும். ஆனால், பேரொளியானது எவ்வித மாற்றத்திற்கும் உட்படாது நித்தியமாக நிலைத்திருக்கும் மெய்பொருளாகும்.
◘ஆத்ம ஞானத்தை அடையும் முன், மாயை மட்டுமே உணரப்படுகிறது, பேரொளியானது உண்மையற்றதாகத் தோன்றுகிறது. ஆத்ம ஞானத்தை அடைந்து பேரொளியை உணர்ந்த பின் மாயையானது உண்மையற்றதாகத் தோன்றுகிறது. ஆதலால் தான் ஆத்ம ஞானிகள் மாயை என்பது பொய்த்தோற்றம் என்கிறார்கள்.
குணங்கள்
◘குணங்கள் அல்லது முக்குணங்கள் என்பது மாயையின் மூன்று தனித்துவமான கூறுகளாகும். அவை சத்வ, ரஜோ, மற்றும் தமோ குணங்களாகும்.
◘இம்மூன்று குணங்களும் அனைவரிடத்திலும், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திலும் வெவ்வேறு விதத்தில் மற்றும் விகிதத்தில் சேர்ந்துள்ளன.
◘அடிப்படை நிறங்களான சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகியவை வெவ்வேறு விகிதத்தில் சேரும்போது எவ்வாறு எண்ணற்றப் பல புதிய வண்ணங்கள் தோன்றுகிறதோ அதுபோல, வெவ்வேறு விகிதத்தில் இருக்கும் இந்த முக்குணங்களே பிரபஞ்ச படைப்புகள் ஒன்றோடொன்று வேறுபட்டிருப்பதற்கான காரணமாகும்.
◘சத்வ குணம் என்பது ஞானம், சமநிலை, நல்லிணக்கம், உள்ளத்தூய்மை, படைப்பாற்றல், நேர்மயமாக்கல், அமைதி, நல்லொழுக்கம் முதலிய தன்மைகள் ஆகும்.
◘ரஜோ குணம் என்பது பேரார்வம், செயல்திறன், தன்முனைப்பு முதலிய தன்மைகள் ஆகும்.
◘தமோ குணம் என்பது சமநிலையற்றத்தன்மை, ஒழுங்கின்மை, மனக்கவலை, மந்தநிலை, சோம்பல், வன்முறை, அறியாமை, காலம் தாழ்த்துதல், அலட்சியம் முதலிய தன்மைகள் ஆகும்.
◘ஒரு தனிநபரின் அல்லது பொருளின் குணாதிசயமானது இந்த முக்குணங்களும் ஒன்றிணைந்து ஏற்படுத்துகின்ற விளைவாகக் கருதப்படுகின்றது. எனவே குணங்கள் நாம் பழக்க வழக்கத்தினால் செய்யும் செயல்களுக்கும், அதையடுத்து விளைகின்ற வாழ்க்கை சூழல்களுக்கும் ஒரு முக்கிய காரணியாக உள்ளன.
◘இறையொளியானது மாயையினால் பாதிக்கப்படுவதில்லை, ஆதலால் அது நிர்குணம் (குணங்களற்ற நிலை) என அறியப்படுகிறது.
ஐக்கியத்தன்மை
◘ஐக்கியத்தன்மை என்பது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும் தன்மையாகும். ஒரு ஆன்மா மற்றொரு ஆன்மாவோடும், ஒரு இதயம் மற்றொரு இதயத்தோடும் இணைந்திருப்பது ஐக்கியத்தன்மை ஆகும்.
◘ஐக்கியத்தன்மை என்பது பிரபஞ்சத்தின் பல்வேறு படைப்புகள் ஒன்றோடொன்று வேறுபட்டிருந்தாலும் அவை அனைத்திலும் பேரொளியை காண்பதாகும்.
◘ஐக்கியத்தன்மை என்பது உயிருள்ள ஜீவராசிகள் மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்தும் ஒரே மூலமான பேரொளியில் இருந்து தோன்றியவை என்பதை அறிந்துணர்வதாகும் .
◘ஐக்கியத்தன்மையில் நாம் மாயையைக் கடந்து செல்கிறோம்.
◘ஐக்கியத்தன்மை வேற்றுமையில் ஒற்றுமையை கொணர்கிறது.
◘ஐக்கியத்தன்மை என்பது உடல், மனம், புத்தி,உணர்வு மற்றும் ஆன்மிகம் ஆகிய அனைத்து நிலைகளில் நம் வாழ்வை ஆன்மிக சாதனைக்கேற்ப அமைத்துக் கொள்ளவதாகும். இந்த ஐக்கிய நிலை யோக நிலையை அடைய வழிவகுக்கும்.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...