பதஞ்சலி மகரிஷி
பதஞ்சலி மகரிஷி, இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாபெரும் ரிஷியாவார். நாக தெய்வமான ஆதி சேஷனே, பதஞ்சலி மகரிஷியாக அவதரித்தார்.
பதஞ்சலி மகரிஷி, காலத்தால் அழியாத யோக சூத்திரங்களை தந்தருளியதால் 'யோகக் கலையின் தந்தை’ எனப் போற்றி வணங்கப்படுகிறார். இவரே முதன்முதலில் யோகம் மற்றும் தியானம் குறித்த ஞானத்தை யோக சூத்திரங்களாகத் தொகுத்து, உலகிற்கு வழங்கியவர். இவை இன்றளவும், உன்னத யோக இலக்கிய உரையாகக் கருதப்படுகிறது. மேலும், இதுவே அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட தொன்மையான சமஸ்கிருத உரையாகும். பதஞ்சலி மகரிஷி, யோகக் கலையினை, துல்லியமான சாஸ்திரமாக வகுத்துக் கொடுத்தவராவார். மேலும், இவர் இலக்கணம் மற்றும் மருத்துவம் பற்றிய ஆய்வுகளையும் வகுத்தருளியுள்ளார்.
பதஞ்சலி மகரிஷி, பதினெட்டுச் சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். சித்தர் திருமூலரின் மாபெரும் படைப்பான 'திருமந்திரம்' எனும் நூலில், பதஞ்சலி மகரிஷி, தலை சிறந்த சித்தர் நந்திகேஸ்வரரிடமிருந்து யோகக் கலையைக் கற்றுக்கொண்டாரெனக் குறிப்பிட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில், இணையத் தளத்தில் அதிகம் தேடப்படும் வார்த்தையாக 'யோகா' உள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகள் பலர் தேர்ந்தெடுக்கும் ஆன்மிக தலமாகப் பாரதம் திகழ்ந்து வருகிறது. யோகக் கலையுள் மறைந்திருக்கும் விஞ்ஞானமும், அது அளிக்கும் தெளிவும் இத்தகைய பலரை ஈர்க்க காரணமாய் உள்ளது.
நவீன காலத்தில் ஏற்படும் எந்தவொரு உடல் மற்றும் மனநல குறைபாடுகளுக்கும் யோகக் கலையின் மூலம் தீர்வுகள் காணலாம். யோகக் கலை, மனித வளர்ச்சியின் அனைத்து பரிமாணங்களையும் உள்ளடக்கியது. இதன் நோக்கம் வெறும் உடல் மற்றும் மனநலன் மட்டுமென வரையறுக்க இயலாது. நாம் ஆத்ம ஞானம் பெற்று, யோகக் கலையின் சாராம்சத்தை முழுமையாக உணர வேண்டும் என்ற எண்ணத்துடன் முயற்சி மேற்கொள்வதே மாபெரும் மகரிஷிக்கு நன்றி செலுத்த சரியான வழியாகும்.
நவீன காலத்தில் ஏற்படும் எந்தவொரு உடல் மற்றும் மனநல குறைபாடுகளுக்கும் யோகக் கலையின் மூலம் தீர்வுகள் காணலாம். யோகக் கலை, மனித வளர்ச்சியின் அனைத்து பரிமாணங்களையும் உள்ளடக்கியது. இதன் நோக்கம் வெறும் உடல் மற்றும் மனநலன் மட்டுமென வரையறுக்க இயலாது. நாம் ஆத்ம ஞானம் பெற்று, யோகக் கலையின் சாராம்சத்தை முழுமையாக உணர வேண்டும் என்ற எண்ணத்துடன் முயற்சி மேற்கொள்வதே மாபெரும் மகரிஷிக்கு நன்றி செலுத்த சரியான வழியாகும்.
அஷ்டாங்க யோகம்
பதஞ்சலி மகரிஷி, தனது யோக சூத்திரங்களை நான்கு அத்தியாயங்கள் அல்லது பாதங்களாக (சமஸ்கிருதத்தில்) பிரித்துள்ளார். அவை சமாதி பாதம், சாதனை பாதம், விபூதி பாதம் மற்றும் கைவல்ய பாதமாகும்.
அஷ்டாங்க யோகம், படிப்படியாக ஆத்ம ஞானத்தை அடையும் எண்வழி பாதையாகும் எனச் சாதனை பாதத்தில் விளக்கப்பட்டுள்ளது. அதன் எட்டு அங்கங்கள் யாதெனில், இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம் மற்றும் சமாதியாகும்.
அஷ்டாங்க யோகத்தின் எட்டு அங்கங்கள்
வாசிக்க ஒவ்வொன்றையும் கிளிக் செய்யவும்
இயமங்கள் என்பவை சுய கட்டுப்பாட்டிற்கான ஒழுக்கநெறிகள் ஆகும். இவற்றை உலகத்தோடு ஒன்றி வாழும் பொழுது தான் செயல்படுத்த முடியும். ‘பிரபஞ்ச நெறிமுறைகள்’ எனப்படும் இவற்றை, எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் பின்பற்றலாம். பரிந்துரைக்கப்பட்ட ஐந்து இயமங்கள் கீழ்கண்டவாறு விளக்கப்பட்டுள்ளன.
அஹிம்சை அல்லது வன்முறையின்மை என்பது சிந்தனை, சொல் மற்றும் செயலில் வன்முறை இல்லாதிருத்தல் ஆகும். தன்மீது கடுமையாய் இல்லாதிருத்தலும் ஆகும்.
சத்தியம் அல்லது உண்மைதன்மை என்பது எல்லா நேரங்களிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் உண்மையாக இருப்பதாகும். இது எல்லாப் பொய்களையும் புறக்கணித்தல் ஆகும்.
அஸ்தேயம் அல்லது கள்ளாமை என்பது பொருட்கள், உறவுகள், அறிவு, சிந்தனைகள் என அனைத்து விதமான களவிலிருந்தும் தன்னை விலக்கிக் கொள்வதாகும்.
பிரம்மச்சரியம் என்பது எல்லா நேரத்திலும் இறை நிலையோடு ஒத்திசைந்து வாழ்வதாகும். மேலும், இது கற்புடைமை அல்லது பாலியல் கட்டுப்பாட்டைப் பேணுவதாகும்.
அபரிகிரஹம் என்பது பேராசையிலிருந்து விலகி இருத்தல்; தேவைக்கு அதிகமாக பொருட்களைக் குவித்து வைக்காதிருத்தல் மற்றும் தன்னுடமையற்ற நிலையாகும்.
நியமம் என்பது ‘தனிமனித நெறிமுறைகள்’ ஆகும். பரிந்துரைக்கப்பட்ட ஐந்து நியமங்கள் கீழ்கண்டவாறு விளக்கப்பட்டுள்ளன.
சௌச்சம் அல்லது தூய்மை என்பது புறத்தூய்மை மற்றும் அகத்தூய்மையைக் குறிக்கிறது. வெளிப்புறத் தூய்மை என்பது நம் உடலையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் ஆகும். அதே நேரத்தில், அகத்தூய்மை என்பது எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் ஆகும்.
சந்தோஷம் என்பது மனநிறைவு மற்றும் மன அமைதியின் விளைவாக ஏற்படும் ஆனந்தம் அல்லது மகிழ்ச்சியாகும்.
தவம் என்பது தீவிரமான தியானமாகும். இதைப் புறத்தவம் மற்றும் அகத்தவம் என இரண்டாகவும் கூறலாம். எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதின் மூலம் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துதல் புறத்தவம் ஆகும். பெருங்குழப்பத்திற்கு மத்தியிலும் அமைதியாக இருத்தல், விடாமுயற்சி, தியாக மனப்பான்மை முதலியவை அகத்தவமாகும். உடலாலும், மனதாலும் கையாளும் சகிப்புத்தன்மை, ஒன்றுக்கொன்று உதவுகிறது.
ஸ்வாத்யாயம் என்றால் சுய பரிசோதனை என்று பொருள். இது புனித நூல்களைப் படிப்பது மட்டுமல்ல, ஒருவர் தனது பழக்கவழக்கங்கள் மற்றும் மனதின் செயல்பாடுகளையும் தொடர்ந்து கவனித்தல் ஆகும்.
கடவுள், ரிஷிகள் அல்லது குருவிடம் முழுமையாகச் சரணடைதலே ஈஸ்வரபிரணிதானமாகும். மேலும் இது நமது செயல்களினால் அடையும் எந்தவொரு பலனையும், இறை விருப்பமாக எண்ணி முழுமையாக ஏற்றுக்கொள்வதும் ஆகும்.
ஆசனம் என்றால் உறுதியான, வசதியான இருக்கை என்று பொருள்.
பிராணாயாமம் மற்றும் தியானத்திற்கு, ஆசனம் மிகவும் அவசியமாகும். உறுதியான தியான நிலை இல்லாமல், உடல் அசைவின்மையை அடைய முடியாது. இந்த அசைவின்மை இல்லாமல், மனதை ஒருமுகப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் சாத்தியமில்லை.
யோகாசனங்கள், விழிப்புணர்வுடனும், முறையான சுவாசத்துடனும் செய்யக்கூடிய உடற் பயிற்சிகளாகும். இவை உடலை வலிமையாகவும், வளையும் தன்மையுடனும் வைத்திருக்க நமக்கு உதவுகின்றன.
பிராண சக்தி என்பது இப்பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ள நுட்பமான அண்டப் பேராற்றலாகும். நாம் சுவாசிக்கும்பொழுது நமது சூரியனிடமிருந்து பிராண சக்தியைப் பெறுகிறோம். சுவாசமே நாம் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமும், அறிகுறியும் ஆகும். பிராணாயாமம் என்பது நம் சுவாசத்தையும், நாம் சுவாசிக்கும் முறையையும் ஒழுங்குபடுத்தும் பயிற்சியாகும்.
பிராணயாமத்தின் பொழுது நுட்பமான பிராண சக்தி நமது பஞ்சகோஷங்களுக்குள் ஊடுறுவி நமது சரீரத்தை சுத்திகரிக்கிறது.
பிராணாயாமம், அதிகப்படியான பிராண சக்தியை உட்கிரகிக்க உதவுகிறது. பிராணாயாமம் சுவாசத்தை உள்ளிழுத்தல், வெளிவிடுதல் மற்றும் சுவாசத்தை உள்நிறுத்துதல் ஆகிய நிலைகளைக் கொண்டதாகும். சுவாசத்தை உள்நிறுத்தும் பொழுது, மார்பு காந்த ஆற்றல் களமாகவும், நுண் குழாய்கள், சுழலும் விசையாழிகளாகவும் (turbines) இயங்கி, உள்வாங்கிய ஆற்றலை, ஆற்றல் பெருக்கியாகச் செயல்படும் நுரையீரலுக்கு அனுப்புகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் ஆற்றல், சக்கரங்களில் சேமிக்கப்படுகிறது. சக்கரங்கள், உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆற்றலைக் கொண்டு செல்லும் மின்மாற்றிகளாகச் செயல்படுகின்றன. இந்தச் செயல்முறை நாம் பல ஆண்டுகாலம் உயிர்வாழக் காரணமாய் விளங்குகிறது.
ஸ்தூல சரீரத்தை ஆசனமும், நுண் சரீரத்தை பிராணயாமமும் வலுப்படுத்துகிறது. பிராணயாமத்தை தவறாமல், முறையாகப் பயிற்சி செய்யும்பொழுது, நாடி அமைப்பையும், பஞ்சகோஷங்களையும் பலப்படுத்துகிறது. மேலும் இது, அமைதியை உணரவும், தியானத்தில், எண்ணங்கள் அல்லது சிந்தனைகளின் விகிதத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
பிரத்யாஹாரம் என்பது வெளி உலகிலிருந்து புலன்களையும், மனதையும் உள் நோக்கித் திருப்புவது ஆகும். இது விழிப்புணர்வோடு ஒருவரின் மன செயல்பாடுகளை, புலன் மயக்கத்திலிருந்து விலக்குவதாகும். ஒருவர் வெளி உலகின் பிடியிலிருந்து விடுபடப் பிரத்யாஹாரம் உதவுகிறது.
பிரத்யாஹார பயிற்சி புத்தியிலிருந்து துவங்குகிறது.
தாரணை என்பது உள்ளோ, புறமோ, ஒரு வடிவம் அல்லது பொருளின் மீது மனதை ஒருமுகப்படுத்துவது ஆகும். இது ஒருவரது மனதில் ஒரே ஒரு சிந்தனையை மட்டுமே கொண்டிருக்கும் நிலையாகும். மனம் தானாகவே நிலைநிறுத்திக் கொள்ள இது உதவுகிறது.
சுவாசத்தைக் கவனித்தல், மந்திரங்களை உச்சரித்தல், ஒரு உருவம் அல்லது பொருள் அல்லது ஒளி போன்றவற்றைக் காட்சிப்படுத்துதல் போன்றவை தாரணையின் பல்வேறு முறைகளாகும்.
தியானம் என்பது உடல், மனம் மற்றும் புத்தியை அமைதியுறச் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு செயல்முறையாகும். நிலையான உடல் அமைதி, ஒருமுகப்படுத்துதல் மற்றும் காட்சிப்படுத்துதல் ஆகியவற்றின் விளைவே தியானமாகும்.
நாம் தியானத்தில் முன்னேறும்பொழுது, மன அமைதியை நிலைநிறுத்துகிறோம். நமது விழிப்புணர்வு விரிவடைந்து நாம் ஒளியை உணரத் துவங்குகிறோம்.
சமாதி என்பது ஆழ்ந்த தியானத்தின் விளைவாகும்.
இது முழுமையான ஐக்கிய நிலையாகும். தியானிப்பவருக்கும்,தியானத்தின் செயலுக்கும் எவ்வித வேற்றுமையும் எழாத, சிந்தனையற்ற நிலை இதுவாகும்.
சமாதி நிலையில் நாம் உடல், காலம் மற்றும் இடத்தையும் கடந்து பேரொளியுடன் கலந்து ஐக்கியமாகிறோம்.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...