பிராணாயாமம்
பிராண சக்தி என்பது இப்பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ள நுட்பமான அண்டப் பேராற்றலாகும். நாம் சுவாசிக்கும்பொழுது நமது சூரியனிடமிருந்து பிராண சக்தியைப் பெறுகிறோம். சுவாசமே நாம் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமும், அறிகுறியும் ஆகும். பிராணாயாமம் என்பது நம் சுவாசத்தையும், நாம் சுவாசிக்கும் முறையையும் ஒழுங்குபடுத்தும் பயிற்சியாகும். மேலும், இது அஷ்டாங்க யோகத்தின் நான்காவது அங்கமாகும்.
நாம் சுவாசிக்கும் பிராண சக்தியானது பஞ்ச பிராணன்களாகப் பிரிந்து செயல்படுகிறது. அவை பிராண வாயு, அபான வாயு, சமான வாயு, வியான வாயு மற்றும் உதான வாயு என்பவையாகும்.
பிராண சக்தி, நாடிகள் எனப்படும் நுண்ணிய ஆற்றல் நாளங்கள் கொண்ட வலையமைப்பின் வழியாக நமது உடலமைப்பு முழுதும் பாய்கிறது.பிராணாமய கோஷம், இந்த நாடிகளின் மூலம் பிராண சக்தியைப் பெறுகிறது. நமது உடலில் மொத்தம் 72,000 நாடிகள் உள்ளன. அவற்றில் 101 நாடிகள் முக்கிய நாடிகளாகவும், மற்றவை சிறிய நாடிகளாகவும் செயல்படுகிறது.
மூன்று முக்கிய நாடிகள் முதுகுத்தண்டின் அடிப்பகுதியிலிருந்து தலைப்பகுதி வரை இயங்குகின்றன. அவை இடது புறத்தில் இடகலை நாடி, மத்தியில், முதுகுத்தண்டை ஒட்டி, ஏழு சக்கரங்களின் வழியாகச் செல்லும் சுழுமுனை நாடி மற்றும் வலது புறத்தில் பிங்கலை நாடியாகும்.
பிராணாயாமத்தின் இறுதி நோக்கமானது, இந்த நாடிகளில் உள்ள தடைகளை நீக்கி, செயலற்று இருக்கும் ஆற்றல்களை உயிர்பெறச் செய்வதாகும். இது, உயர்ந்த ஆன்மிகஅனுபவங்களுக்கு வழிவகுக்கிறது. மேலும், படிப்படியாக ஆத்ம ஞானம் அடைதலையும் சாத்தியமாக்குகிறது.
பிராணாமய கோஷத்தை முறையாக மற்றும் முழுமையாக இயங்கச் செய்து அபரிமிதமான பிராண சக்தியைப் பெற்று நமது உடல் அமைப்பில் உள்ள 72,000 நாடிகளையும் தூய்மை அடையச் செய்வதே பிராணாயாம பயிற்சியின் நோக்கமாகும்.
பிராணாயாமம் சுவாசத்தை உள்ளிழுத்தல், வெளிவிடுதல் மற்றும் சுவாசத்தை உள்நிறுத்துதல் ஆகிய நிலைகளைக் கொண்டதாகும். சுவாசத்தை உள்நிறுத்தும் பொழுது, மார்பு காந்த ஆற்றல் களமாகவும், நுண் குழாய்கள், சுழலும் விசையாழிகளாகவும் (turbines) இயங்கி, உள்வாங்கிய ஆற்றலை, ஆற்றல் பெருக்கியாகச் செயல்படும் நுரையீரலுக்கு அனுப்புகிறது.
இவ்வாறு உருவாக்கப்படும் ஆற்றல், சக்கரங்களில் சேமிக்கப்படுகிறது. சக்கரங்கள், உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆற்றலைக் கொண்டு செல்லும் மின்மாற்றிகளாகச் செயல்படுகின்றன.
மூன்று முக்கிய நாடிகள் முதுகுத்தண்டின் அடிப்பகுதியிலிருந்து தலைப்பகுதி வரை இயங்குகின்றன. அவை இடது புறத்தில் இடகலை நாடி, மத்தியில், முதுகுத்தண்டை ஒட்டி, ஏழு சக்கரங்களின் வழியாகச் செல்லும் சுழுமுனை நாடி மற்றும் வலது புறத்தில் பிங்கலை நாடியாகும். பிராணாயாமத்தின் இறுதி நோக்கமானது, இந்த நாடிகளில் உள்ள தடைகளை நீக்கி, செயலற்று இருக்கும் ஆற்றல்களை உயிர்பெறச் செய்வதாகும். இது, உயர்ந்த ஆன்மிகஅனுபவங்களுக்கு வழிவகுக்கிறது. மேலும், படிப்படியாக ஆத்ம ஞானம் அடைதலையும் சாத்தியமாக்குகிறது.
பிராணாயாமம் | பயிற்சி
சுவாசக் காற்றை (பிராணனை) நாசிகளின் வழியாக உள்ளிழுக்கவும். சுவாசக் காற்றோடு சேர்த்து வெண்ணிற அல்லது பொன்னிற இறையொளியையும் உள்ளிழுப்பதாகக் கற்பனை செய்து கொள்ளவும்.
சுவாசக் காற்றை அடக்கி உள் நிறுத்தவும். அவ்வாறு உள்நிறுத்தும் பொழுது, பிராண சக்தி மற்றும் இறையொளியை உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவிலும், ஒவ்வொரு கோஷமாகப் பஞ்ச கோஷங்கள் முழுவதும் பரவச் செய்யவும். உடலமைப்பு முழுவதும் நிரம்பியிருக்கும் இறையொளியை அனுபவித்துணரவும். உங்களால் வசதியாகச் செய்ய இயன்றவரைச் சுவாசக் காற்றை உள்நிறுத்தவும்.
சுவாசக் காற்றை (பிராணனை) முழுமையாக வெளிவிடவும்.
மறுபடியும் மூச்சை உள் இழுக்காமல், படி 2 இல் பயிற்சி செய்த அதே கால அளவிற்குச் சுவாசக் காற்றை அடக்கி நிறுத்தவும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள 4 படிகளும் சேர்ந்தது 1 சுற்றாகும். அனைத்து படிகளுக்கும் ஒரே கால அளவைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்து கொள்ளவும். உணவு உட்கொண்ட பிறகு பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும் அல்லது உணவு உட்கொண்ட பிறகு குறைந்தபட்சம் 2 மணிநேர இடைவெளி இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
யார்
✔ 8 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயிற்சி செய்யலாம்.
எங்கே
✔ வீட்டினுள் அல்லது திறந்தவெளியிலும் பயிற்சி செய்யலாம்.
எப்பொழுது
✔ ஒரு நாளின் எந்த நேரத்திலும் பயிற்சி செய்யலாம். முடிந்தளவு அதிகாலை நேரத்தில் பயிற்சி செய்வது நல்லது.
காலம்
✔ குறைந்தபட்சம் 5 நிமிடங்கள்
பலன்கள்
✔ பிராணாயாமத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்வதால் பின்வரும் உடல், மன மற்றும் ஆன்மிகநலன்களைப் பெறலாம்
✔ முழுமையான ஆரோக்கியத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகிறது.
✔ நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
✔ நுரையீரலின் திறனையும், பிராண வாயுவை உள்வாங்கும் அளவையும், உடலின் ஆற்றலையும் அதிகரிக்கிறது.
✔ நரம்பு கோளாறுகளை நீக்குகிறது.
✔ வாழ்நாளை அதிகரித்து, உயிர் சக்தியை வளப்படுத்துகிறது.
✔ கோபம் மற்றும் பதட்டத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
✔ சோர்வு, கவலைகள் மற்றும் மன அழுத்தத்தை நீக்குகிறது.
✔ ஆழ்ந்த உறக்கத்தை அளிக்கிறது.
✔ மன அமைதியையும், விழிப்புணர்வையும் தருகிறது.
✔ விரைவாக மனதை ஒருநிலைப்படுத்துகிறது.
✔ தியானத்தின் பொழுது எண்ணச் சிதறல்களைக் குறைக்கிறது.
✔ முழு நாடி அமைப்பையும் தூய்மைப்படுத்துகிறது.
✔ நாடி அமைப்பையும், பஞ்ச கோஷங்களையும் பலப்படுத்துகிறது.
✔ நம்மில் செயலற்று இருக்கும் உள்ளுணர்வு போன்ற திறன்களைச் செயல்பட வைக்கிறது.
✔ தெய்வீகத்துடன் ஒன்றிணைய உதவுகிறது.
✔ மனித வாழ்வின் உயரிய நோக்கமான ஆத்ம ஞானத்தை அடைய உதவுகிறது.
பயிற்சி குறிப்புகள்
✔ விரிப்பின் மீது உங்களுக்கு வசதியான ஏதேனுமொரு ஆசனத்தில், நேராக நிமிர்ந்து அமரவும்.
✔ முதுதண்டை நேராக வைத்துக்கொள்ளவும். முகவாயை தரைக்கு இணையாக வைக்கவும்.
✔ உங்கள் முகம், தோள்கள் மற்றும் முழு உடலையும் தளர்த்தவும்.
✔ இயன்றவரை மெதுவாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிடவும்.
✔ சுவாசக் காற்றை உள்ளிழுத்தல், அடக்கி உள் நிறுத்துதல், வெளிவிடுதல் என அனைத்து படிகளுக்கும் ஒரே கால அளவு கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யவும்.
✔ வசதியாக உங்களை வருத்திக்கொள்ளாமல், பயிற்சி செய்யவும்.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...