கேள்வி - பதில்கள்
1. ஆன்மிகச் சாதனை செய்வதற்கு உடல் ஆரோக்கியம் ஏன் மிக அவசியம்?
ஆரோக்கியமான உடல் இல்லாமல் இந்த உலகில் நாம் எதுவும் செய்ய இயலாது. மேலும், ஒரு ஆன்மிகச் சாதகர் நீண்ட நேரம் தியானம் செய்யவும், சமாதியின் உயர் நிலைகளை அனுபவித்துணரவும் ஆரோக்கியமான உடல் மிகவும் அவசியமாகிறது.
2. அதிக நேரம் அமர்ந்து தியானம் செய்யச் சிறந்த ஆசனம் எது?
பத்மாசனம் சிறந்தது. சித்தாசனத்தில் அமர்ந்தும் நீங்கள் அதிக நேரம் தியானம் செய்யலாம். இருப்பினும், உங்களுக்கு ஏற்ற சிறந்த ஆசனத்தைக் கண்டறியவும்.
3. நான் ஆன்மிகச் சாதனையில் முன்னேறி வருகிறேன் என்பதை எப்படிக் கண்டறிவது?
உங்களால் அனைவரையும் எவ்வித பாரபட்சமின்றி நேசிக்க முடிகிறதா என்பதைச் சிந்தித்தாராய்ந்து அறியவும். உங்களால் அனைவருடனும் ஐக்கியநிலையில் ஒன்றிணைய முடிகிறதா என்பதையும் கண்டறியவும். இதன் மூலம் நீங்கள் உங்கள் ஆன்மிக முன்னேற்றத்தைக் கண்டறிய முடியும்.
4. திறம்பட ஆழ்ந்து தியானம் செய்வது எப்படி?
ஆழ்ந்த தியானம் என்பது முதலில் ஒரு சில நிமிடங்களுக்கு மனதைத் தாரணையில் ஒருமுகப்படுத்தி, மனம் எண்ணங்களற்ற நிலைக்குச் சென்று, உடலும், மனமும் அசைவற்று, முழு உடலமைப்பின் அசைவற்ற நிலையுடனும், ஆற்றல்களுடனும் ஒருங்கிணைவதாகும்.
5. மெய் ஞானத்தை அடைவதற்கான முதல் படி என்ன?
தியானம் மற்றும் நேர்மயமாக்குதல்.
6. வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் துன்பங்கள் எதனைக் குறிக்கிறது?
வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் துன்பங்கள், வினைப்பயன்களை எதிர்கொள்வதையும், அவற்றை ஏற்று, பேராற்றல் நம்மை வழிநடத்த அனுமதிப்பதையும் குறிக்கிறது. தொடர்ந்து தியானம் செய்வதாலும், நேர்மயமாக இருப்பதாலும் நமது துன்பங்களைக் குறைக்க முடியும்.
7. கோள்கள் அல்லது கிரகங்கள் நம் வாழ்வை எவ்வாறு பாதிக்கின்றன?
கர்ம வினைகள் நம்முடையவை. கோள்கள் அல்லது கிரகங்கள் உரிய நேரத்தில் அவற்றைச் செயல்படுத்த மட்டுமே செய்கின்றன. தீவிரமான ஆன்மிகச் சாதனையின் மூலம், நமது கர்மவினைகளை அழித்து, நமது கர்மவினைகளின் தாக்கத்தைப் பலவீனப்படுத்தினால், கிரகங்களின் தாக்கமும் குறையும். ஆகவே நான் எப்பொழுதும் ஆழ்ந்து திறம்படத் தியானிக்குமாறு வலியுறுத்துகிறேன். திறம்பட ஆழ்ந்து தியானித்தால் நம் வாழ்க்கை, வாழ்க்கை ரேகை மற்றும் கர்ம வினையின் பாதை மாறும். தியானம், வாழ்வின் கடினமான காலத்தை எதிர்கொண்டு, நாம் கர்ம வினைகளின் சுழற்சியிலிருந்து விடுபடத் தேவையான வலிமையையும், மன உறுதியையும் நமக்கு அளிக்கிறது.
8. நாம் விரைவாகத் தூய நிலையை அடைய ஏதேனும் வழி உள்ளதா?
பேராற்றல்களை அனுபவித்துணரும் பொழுது அது சாத்தியமே என்று எனது குரு சொல்வார். நாம் வாழ்க்கையைத் தெளிவோடு,தெய்வீகத்துடன் ஒன்றிணைந்து வாழும்பொழுது, நமது தூய நிலை அதிகரிக்கிறது என்பதையும் நான் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். தியானம் செய்வதால், நமது தூய நிலை நிச்சயமாக அதிகரிக்கும்.
9. உயரிய ஆற்றல்களை அனுபவித்துணர நம்மை நாமே தயார் செய்து கொள்வது எப்படி?
அதற்கு இரண்டு கருவிகள் மட்டுமே உள்ளன. அவை, தியானம் மற்றும் நேர்மயமாக்குதல் ஆகும்.
10. நேர்மயமாக்குதலுக்கான வழியை நீங்கள் பரிந்துரைக்க முடியுமா?
உங்கள் வாழ்க்கையின் சில நாட்களைக் கவனியுங்கள். ஒரே மாதிரியாக, பழக்கத்தின் அடிப்படையில் நீங்கள் நடந்து கொள்வதை உணர்வீர்கள். சில சமயங்களில் கோபம், பொறாமை அல்லது வேறு சில எதிர்மறைத் தன்மைகள் வெளிப்படுவதையும் கவனிப்பீர்கள். அது மீண்டும் நிகழாத வண்ணம் விழிப்புடனும், கவனத்துடனும் செயல்படுங்கள்.
11. ஓம்(OM) மற்றும் அஉம்(AUM) இடையே உள்ள வேறுபாடு என்ன?
சத்ய யுகத்திலிருந்து துவாபர யுகம் வரை அஉம்(AUM) என உச்சரிக்கப்பட்டது. அதுவே கலியுகத்தில் மருவி, ஓம்(OM) என உச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு உச்சரித்தாலும் தவறில்லை. நீங்கள் அஉம்(AUM) என உச்சரிக்கும்பொழுது, அகரம்(அ), புதிய தெய்வீக ஆற்றல்களை உருவாக்குகிறது, உகரம்(உ), உருவாக்கிய ஆற்றல்களைப் பாதுகாக்கிறது, மகரம்(ம்) நமது உடலமைப்பில் உள்ள தேவையற்ற ஆற்றல்களை அழிக்கிறது. ஓம்(OM) என உச்சரிக்கும்பொழுது, புதிய ஆற்றல்கள் உருவாகுவதில்லை. அஉம்(AUM)க்கு மற்றொரு அழகான சிறப்பம்சமும் உள்ளது. அதாவது அ, உ, ம் என்ற இந்த மூன்று ஒலிகளையும் வாய் பேச இயலாதவர்களும் எளிதாக உச்சரிக்க முடியும். நீங்கள் அஉம்(AUM) என உச்சரிக்கும் பொழுதெல்லாம், சஹஸ்ர சக்கரம் செயல்படுகிறது. ஆனால், ஓம்(OM) என உச்சரிக்கும் பொழுது, பிட்யூட்டரி(Pituitary) சுரப்பி மட்டுமே செயல்படுகிறது.
12. நான் பிராணாயாமம் பயிற்சி செய்வதைத் தவிர்த்துவிட்டு, அந்த நேரத்தைத் தியானம் செய்வதற்குப் பயன்படுத்தலாமா?
தியானம் செய்வதற்குச் சமமாகப் பிராணாயாமம் பயிற்சி செய்வதும் முக்கியமானது. பிராணாயாமம் செய்யும்பொழுது மனதில் எண்ணங்கள் தோன்றுவது குறையும். நீங்கள் அதிக நேரம் தியானம் செய்யலாம், ஆனால், பிராணாயாம பயிற்சியைத் தவிர்க்கலாகாது.
13. தியானத்திற்குப் பிறகு, பிறரை வாழ்த்துவதன் முக்கியத்துவம் என்ன?
தியானம் செய்து முடிக்கும்பொழுது நீங்கள் மிகவும் சூக்ஷ்மமான நிலையில் இருப்பீர்கள். அந்நிலையில் நீங்கள் ஒருவரை வாழ்த்தும்பொழுது, அவர்களுக்கு நல்லெண்ணம், அமைதி மற்றும் வளமான வாழ்வுக்கான ஆற்றல்களை அனுப்புகிறீர்கள். இதனால், இறையருள் உங்களுக்குக் கிட்டுகிறது. மேலும், தியானம் செய்வதற்கான உங்கள் மனவுறுதியும் அதிகரிக்கிறது.
14. தியான நுட்பங்கள் இல்லாமல், ஒருவரால் தியானம் செய்து மெய்ஞானம் அடைய முடியுமா?
தியான நுட்பங்கள், தியானம் செய்வதை எளிதாக்குகின்றன. தியானம் செய்யும்பொழுது கர்ம வினைகளை அழிப்பது எளிதாகும். நுட்பங்கள் இல்லாமலும் இது சாத்தியமாகும், ஆனால், அதற்கு அதிகக் காலம் தேவைப்படும்.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...